சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வரிடம்  மருத்துவர் குழு பரிந்துரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை  அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா 2வது அலையின் தீவிர பரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே  10-ந்தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்கத் தொடங்கியதால்ர,  மே மாதம்  24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் அது மேலும் ஒரு வாரம் ( ஜூன் 7)  நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள்கொடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மருத்துவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சில மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், தொற்று தீவிரமாக உள்ள கோவை உள்பட சில மாவட்டங்களில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை தொடரவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ‘அதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து,  தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.