சென்னை,

புழல் சிறையில் மேலும் ஒரு சிறை கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிது. புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது சமூக ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த  ராம்குமார் உட்பட 3 பேர் புழல் சிறையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த  விசாரணை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போரூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், தந்தை, மகனை கொலை செய்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம்  புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு குற்ற செயல்கள் இருந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தில் விசாரணை கைதியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தபோது செந்தில்குமார், சிறைச்சாலை யின் அறையில் இல்லை என கூறப்பட்டது.

இதனையடுத்து சிறைக்காவலர்கள் தேடிப் பார்த்ததில், கழிவறையில் ஜன்னலின் கம்பியில் லுங்கியில் தொங்கிய படி, செந்தில்குமார், சடலமாக கிடந்ததாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக விசாரணை கைதியின் சடலம், அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் திடீரென தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது.

புழல் சிறையில் கடந்த ஓராண்டில் மட்டும், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார், கடந்த 10 ஆம் தேதி ஆசிரியை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா, தற்போது இரட்டை கொலை வழக்கில் செந்தில்குமார் என தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.