குணோ, மத்தியப்பிரதேசம்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி மரணம் அடைந்துள்ளது.
கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிவிங்கி புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, இப்புலிகளை இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.
எனவே, ஆப்பிரிக்காவிலுள்ள நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்குச் சிவிங்கி புலிகள் கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகளை வனப் பகுதிக்குள் பிரதமர் மோடி விடுவித்தார்.
இவற்றில் 8 சிவிங்கி புலிகளில் ஒன்றான ஷாஷா பெண் புலி உயிரிழந்தது. தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழந்துள்ளதாகத் தலைமை வனப் பாதுகாவலர் தகவல் தெரிவித்தார். இதுவரை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவற்றில் 3 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளன.