இந்தியாவில் அருகி வரும் சிறுத்தை புலியின் எண்ணிக்கை அதிகரிக்க ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் மேலும் ஒரு சிறுத்தை நேற்று இறந்தது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி ஆகிய மாதங்களில் இரண்டு கட்டங்களாக 20 சிறுத்தை புலிகள் கொண்டு வரப்பட்டது.
இந்த சிறுத்தைகள் அனைத்தும் மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஐந்து சிறுத்தைகள் பல்வேறு காரணங்களால் இறந்தன. இந்த நிலையில் இரண்டு பெண் சிறுத்தைகளில் ஒன்றான ‘தாத்ரி’ நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆறு சிறுத்தைகள் உட்பட குனோ தேசிய பூங்காவில் உள்ள மொத்தம் 9 சிறுத்தைகள் கடந்த சில மாதங்களில் இறந்துள்ளன.
கடந்த வாரம் பலியான சிறுத்தையின் உடற்கூராய்வில் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலரால் செப்டிசீமியா ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘தாத்ரி’ என்று பெயரிடப்பட்ட சிறுத்தை நேற்று இறந்ததை அடுத்து அதன் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகே அது இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
அதேவேளையில், தேசிய சிறுத்தை திட்டத்தில் உறுப்பினராக இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபிய வனவிலங்கு நிபுணர்களிடம் சிறுத்தைப் புலிகள் குறித்த தரவுகள் எதையும் இந்திய அதிகாரிகள் பகிரவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுத்தைகள் இறந்தே பின்னரே அதுகுறித்து தங்களுக்கு தகவல் தரப்படுவதாகவும் உடற்கூறாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்ய மட்டுமே தங்களை ஈடுபடுத்துவதாகவும் சிறுத்தைகள் பராமரிப்பில் தங்களை ஈடுபடுத்தாமல் இந்திய அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைக்கு தோல் தொற்று : கழுத்துப்பட்டையால் செப்டிசீமியா ஏற்பட்டு விபரீத மரணம்…