மதுரை
புளூவேல் என்னும் தற்கொலை விளையாட்டை விளயாடிய மாணவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
புளூவேல் கேம் என்னும் ஆன்லைன் விளையாட்டு மிகவும் அபாயகரமானது என மாணவர்களுக்கு அறிவுரை தரப்பட்டு வருவது தெரிந்ததே. அந்த விளையாட்டில் மொத்தம் ஐம்பது போட்டிகள் உள்ளன. கடைசியாக உள்ளது உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வது. இந்த விளையாட்டி விளையாடி தற்கொலை செய்துக் கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று மதியம் மதுரை மாவட்டத்தில் இந்த விளையாட்டு ஒரு மாணவரை தற்கொலைக்கு தூண்டி அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகில் மொட்டைமலை என்னும் ஊரில் வசிப்பவர் விக்கி. 19 வயதான இவர் வணிகவியலில் இரண்டாம் ஆண்டு படிப்பவர். இவருக்கு புளூவேல் கேம் விளையாடும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மொட்டைமலையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் சமீபத்தில் தான் மொபைல் ஃபோன் வாங்கி அந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் தூக்கில் தொங்கியது மாலை 4.15 மணிக்கு தெரிய வந்துள்ளது.
புளூவேல் சேலஞ்சின் படி மாடியில் இருந்து குதிப்பதே கடைசி சவால் ஆகும். ஆனால் விக்கி தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவருடைய கையில் புளூவேல் சின்னம் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அவருடைய சடலத்துக்கு அருகே ஒரு பேப்பரில், “புளூவேல் சேலஞ்ச் ஒரு விளையாட்டு அல்ல, அபாயகரமான ஒரு சோதனை. விளையாட ஆரம்பித்தால் வெளியேற முடியாது” என எழுதி வைத்துள்ளார்.
சென்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று இந்திய அரசு, கூகுள், முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாஃப்ட், யாஹூ போன்ற அனைத்து இணையங்களிலும் புளுவேல் சேலஞ்ச் விளையாட்டின் அனைத்து லிங்குகளையும் உடனடியாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.