ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதில் மெத்தனம் காட்டுவதால், அங்கு வசிக்கும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடித்து உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 25ந்தேதி அன்று ராஜஸ்தானில் உள்ள சிறையில் உள்ள தண்ணீரைக் குடித்ததால் 3 கைதிகள் இறந்தனர், 12 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக காரணம் அசுத்தமான தண்ணீர் என்பதும், அதனால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும், ராஜஸ்தானின் கோட்டா பகுதியைச் சேர்ந்த ஜவஹர் நகர் பகுதியில் அசுத்த குடிநீர் குடித்தவர்களில் நோய்வாய் பாதிக்கப்பட்டு வைபர் ராய் என்ற மாணவர் உயிரிழந்தார். மேலும் 36 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் 15ந்தேதி அரங்கேறியது.
இந்த நிலையில், நேற்று, ராஜஸ்தானின் கரௌலிமாவட்டம் படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா பகுதிகளில் அசுத்தமான தண்ணீரை உட்கொண்டதால் ஒருவர் இறந்தார், மேலும் 80 உள்ளூர்வாசிகள் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 48 குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறிய மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்திர குப்தா கூறும்போது, “செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த னர். அவர்களில் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் வார்டில் 48 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர் என கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரம் தொடர்பான நடவடிக்கையில் மட்டுமே தீவிரம் காட்டும் மாநில முதல்வர் அசோக் கெலாட் மக்கள் பிரச்சினையிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், சுத்தமான தண்ணீரை வழங்க ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் அசுத்தமான தண்ணீர் குடித்ததன் காரணமாக 3 அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு மீது கடுமையான விமர்சனங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.