பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இடுப்பளவு நீரில் இறந்தவர் ஒருவரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழகமெங்கும் கடும் மழை பெய்து வருகிறது.  கன்யாகுமரி மாவட்டத்தில் மரங்கள் சரிந்து, மின் கம்பங்கள் விழுந்து, இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதே போல பெரம்பலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகில் உள்ள பேரையூர் என்னும் கிராமத்தில் நேற்று முன் தினம் பெரியசாமி என்பவர் மரணம் அடைந்துள்ளார்.  உடல்நலக் குறைவால் இறந்த இவர் உடலை நேற்று அடக்கம் செய்ய எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த ஊரில் மயானம் வெள்ளாற்றின் மறுகரையில் உள்ளது.  அதைக் கடக்க பாலம் தேவை என பல நாட்களாக அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ஆனால் அரசு அதற்கு செவி சாயக்கவில்லை.  தற்போது வெள்ளாற்றில் மழை காரணமாக இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது.  அதனால் பெரியசாமியின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கிச் சென்றுள்ளனர்.  இறுதி ஊர்வலத்தில் சென்ற ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.  உடன் வந்த உறவினர்கள் அவரைக் காப்பாற்றி உள்ளனர்.

அதன் பிறகு அக்கரையில் உள்ள மயானத்தில் பெரியசாமியின் உடல் அடக்கம் செய்யப் பட்டது.  இது குறித்து ஊர் மக்கள் இனியாவது இந்த நிலை ஏற்படாமல் இருக்க உடனடியாக மயானத்துக்கு ஒரு பாலம் அமைத்துத் தர வேண்டும் என மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.