மயிலாடுதுறை,

144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குரு பெயர்ச்சியையொட்டி மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா  கடந்த 12ந்தேதி தொடங்கியது.  இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழா இன்றுடன் (24ந்தேதி) முடிவடைகிறது.

விழாவை முன்னிட்டு, காவிரி துலாக்கட்டத்தில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் மயிலாடுதுறை வந்து புனித நீராடி செல்கின்றனர்.

இந்த மகாபுஷ்கர விழா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட ஏராளமான அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகளும் புஷ்கரத்தில் பூஜை செய்து வழிபட்டனர்.

புஷ்கர விழாவின்போது,  காவிரி துலாக்கட்டத்தின் வடகரையில் மஹா ருத்ர சதசண்டி ஹோமம், சுவாமி தீர்த்தவாரி, தென்கரையில் கலச பூஜைகள் நடந்தன. காவிரி தாய்க்கு, திருக்கல்யாண வைபவமும் நேற்று நடந்தது.

மகா புஷ்கர விழா  இன்றுடன் நிறைவடைகிறது. நிறைவு நாளான இன்று, விடையாற்றி உற்சவமும், துவஜா அவரோகணம் நடக்கிறது.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது (குருப்பெயர்ச்சி), குரு எந்த ராசியில் இருக்கிறாறோ அங்கும் அடுத்த ராசிக்கு செல்லும் போதும் 13 நாட்கள் இருந்து விட்டு மீண்டும் தன்னிடம் வந்துவிடும்படி கூறினார் பிரம்மதேவன்.  குருபகவான் எந்த ராசிக்கு மாறுகிறாரோ அந்த ராசியின் நதி எதுவோ அங்கு வந்து புஷ்கரன் தேவதை (அமிர்தகலசம்) தங்குவார். புஷ்கரன் தங்கும் காலமே அந்த நதியின் புஷ்கரமாக கருதப்படுகிறது.

பிரம்ம தேவனின் அருளாலும், குருபகவானின் பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும் போது 66 கோடி தீர்த்தங்களும் அந்த நதியில் கலப்பதாக ஐதீகமும், நம்பிக்கையும் ஆகும்.

தற்போது நடைபெற்றுள்ள குரு பெயர்ச்சியின் காரணமாக,  காவிரி நதியில் புஷ்கரமானவர் இந்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை வாசம் செய்வதாக ஐதீகம்.

அதன்படி காவிரியில் இந்த புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதால் காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிர பரணி, பிரம்மபுத்ரா, துங்கபுத்ரா, சிந்து, பிராணஹிதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.