சென்னை

துக்ளக் ஆசிரியரும் ஆர் எஸ் எஸ் பிரமுகருமான குருமூர்த்தி இந்தியப் பொருளாதாரம் அடிமட்டத்தை தொட்டு விட்டதால் அரசின் உடனடி நடவடிக்கை தேவை என உரையாற்றியுள்ளார்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆடிட்டர் குருமூர்த்தி என பரவலாக அறியப்படுபவர்.  இவரது பொருளாதார கட்டுரைகள் பலவும் மக்களிடம் புகழ் பெற்றவை.    சென்னை பண்ணாட்டு மையத்தில் “பணமதிப்புக் குறைப்பின்  விளைவுகள்” என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டு குருமூர்த்தி உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் தெரிவித்ததாவது :

“இந்தியப் பொருளாதாரம் தற்போது அடிமட்டத்துக்கு சென்றுவிட்டது.  இதை உடனடியாக மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்.  மத்திய அரசு உடனடியாக வங்கிகளின் வாரா கடன், முத்ரா, போன்ற பலவற்றில் உடனடியாக முடிவு எடுத்தால் தான் இந்திய பொருளாதாரம் முன்னேறும்.

நான் இந்த கூட்டத்தில் அரசின் சார்பாக பேச வரவில்லை.  ஆயினும் அரசின் சில முடிவுகளை விமர்சிக்க வேண்டியுள்ளது.  பணமதிப்பு குறைப்பு, திவால் சட்டம், ஜி எஸ் டி போன்ற நடவடிக்கைகள் அவசர கதியில் அதுவும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது.   அதை வணிகத் துறையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பண மதிப்புக் குறைப்பு மூலம் பல பயன்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும்.   ஆனால் அது மிக மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.  பணமதிப்பு குறைப்பினால் வர்த்தகத் துறை பெரும் பாதிப்புக்குள்ளானது.  பல வேலைவாய்ப்புக்கள் குறைந்துள்ளன.  தவிர பல கருப்புப் பண முதலைகள் தப்பி விட்டனர்.  எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அது முழுமையாக நிறைவேறவில்லை.

மத்திய அரசு முத்ரா திட்டத்தை நிரைவேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது.   அதை சரி செய்த பின்பே பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையை அமுல் படுத்தி இருக்கவேண்டும்.  இதுதான் சரியான வழிமுறை.  தனது நிதிக் கட்டுப்பாட்டை இழக்க விரும்பாத ரிசர்வ் வங்கி முத்ராவை நிறுத்திவிட்டது.

பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையும், வருமானத்தை ஒப்புக் கொள்ளும் (voluntary income disclosure) திட்டமும் ஒன்றாக அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும்.   ஆனால் அதில் இடைவெளி ஏற்பட்டு,  வருமானம் ஒப்புக் கொள்ளும் திட்டம் முதலிலும்,  பண மதிப்பு குறைப்பு அடுத்ததாகவும் வெளி வந்தது.  இது மாபெரும் தவறு.   வருமான வரியை முன்கூட்டியே வசூலிக்க வேண்டிய அரசு,  இப்போது வரியை வசூலிக்க கருப்புப் பணத்தின் பின் அலைகிறது.

ஜி எஸ் டி திட்டம் நம்பிக்கைக்குரிய, வரவேற்கத் தகுந்த ஒரு திட்டமாகும்.  ஆனால் அதையும் இதே நேரத்தில் அமுல்படுத்தியதால் படிப்படியாக முன்னேற வேண்டிய பொருளாதாரம் அடிமட்டத்தை அடைய உதவி விட்டது.  நமது நாட்டின் பொருளாதார நிபுணர்களும் சரியான ஆலோசனையை அரசுக்கு அளிக்கவில்லை.  அவர்கள் அளித்த ஒரு சில ஆலோசனைகளையும் அரசு ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை”  என குருமூர்த்தி பேசி உள்ளார்.

இதே போல ஒரு கருத்தை பா ஜ க வின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.  அவர்  இந்தியப் பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றும் அதை உடனடியாக அரசின் நடவடிக்கைகளால் மேம்படுத்த வேண்டும் எனவும் கூறி இருந்தார்.   தற்போது பா ஜ க வின் ஆதரவாளரான குருமூர்த்தியும் இதே கருத்தை கூறி இருக்கிறார்.

குருமூர்த்தி தனது உரையில் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமே விமரிசித்தார் என்பதும்  பிரதமர் மோடியை விமர்சனம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.