சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பெண்களுக்கான  பிங்க் ஆட்டோ திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்கனவே அறிவித்தபடி, பெண்களுக்கான  பிங்க் ஆட்டோ திட்டத்தை  தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் சமூகநலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில்  அறிவிக்கப்பட்ட  நிலையில், இன்று மகளிர் தினத்தை  முன்னிட்டு,   சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில்  25பெண்களுக்கு முதல்கட்டமாக பிங்க் ஆட்டோவை வழங்கி அதை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். .

 

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.  இத்திட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் சமூகநலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில்  அறிவிக்கப்பட்ட மகளிர் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு முற்கட்டகமாக  250 பெண்கள்  தேர்வு செய்யபட்டுள்ளனர்.   இவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதையடுத்து தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ 3000 கோடியில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

யாரெல்லாம் பிங்க் ஆட்டோவுக்கு விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகறது.   இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். பெண்களுக்கு மட்டுமே இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முற்றிலும் பெண்களாலேயே இயக்கப்படும். இதனால் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோக்களில் பாதுகாப்புக்காக மகளிர் காவல் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் கருவி, பெண்களுக்கான உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த திட்டத்தின்படி தேர்வு செய்யப்பட்டுள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. ஆட்டோ வாங்குவதற்கு தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடனாக பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும். இந்த ஆட்டோக்களை மானிய விலையில் பெற குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆட்டோ திட்டத்திற்காக மொத்தமாக ரூ 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.