டில்லி

ரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 6 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் சீன நாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் எல்லை பிரச்சினை குறித்துப் பேச உள்ளனர்.

இந்திய சீன எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவங்கள் குவிக்கப்பட்டன.   அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளைக் குவித்தன.   இதனால் எல்லைப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.  இதற்கிடையில் சீன அதிபர் தனது படைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்ததும்  இந்தியப் பிரதமர் முப்படைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியதும் பரபரப்பை அதிகரித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லைப் பிரச்சினையில் தாம் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் நடத்தத் தயார் என அறிவித்தார்.   ஆனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இதை மறுத்து விட்டன. மேலும் இது குறித்து இரு நாட்டு மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தி முடிவு காண உள்ளதாகவும் இரு நாடுகளும் தனித்தனியே அறிவித்தன.

இந்நிலையில் வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் மாதம் ஆறாம் தேதி அன்று இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.  இந்த பேச்சு வார்த்தை கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுசுல் மோல்டோ பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சார்பில் 14ஆம் படைத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.  இதுவரை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற  பேச்சு வார்த்தைகளில் எவ்வித  சுமுக முடிவும் ஏற்படாததால் தற்போது இந்த பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.  இதன் மூலம் நல்ல முடிவு ஏற்படும் என இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.