டில்லி

த்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் இல்லத்தில் கூடியது.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ரூ.,20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்புக்களுக்கு  இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.   அதன் அடிப்படையில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20000 கோடிக்கு நிவாரண சலுகைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10000 கோடி கடனுதவி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

அவர் மேலும், “உற்பத்தியைப் பெருக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் வழிகாட்டுதல் குழுக்கள் அமைக்கபட்டுள்ளன.  நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கபட உள்ளன.

நாடு முழுவதும் விளை பொருட்களைத் தடையின்றி விற்க மத்திய அமைச்சரவை இந்த கூட்டத்தில் அனுமதி அளித்துள்ளது.  இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  இதன் மூலம் நாட்டில் எங்கு விளையும் பொருட்களையும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்க முடியும்.

மத்திய அமைச்சரவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய  ஒப்புதல் அளித்துள்ளது.  அதன் அடிப்படையில் உருளைக்கிழங்கு அத்தியாவசிய பொருட்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளைக்கு சியாமா பிரசாத் முகர்ஜி எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை அனும்டி அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.