மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் ஷஹாபூரில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள ஷாபூர் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த ராட்ச கிர்டர் இயந்திரம் நள்ளிரவு திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில், அங்கு பணியாற்றி வந்த ஏராளமானோர் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கிரேன் விழுந்த விபத்தில் சிக்கிய 15 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கூறிய NDRF உதவி கமாண்டன்ட் சாரங் குர்வே “அதிகாலை 1:30 மணியளவில் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, எங்கள் முதல் குழு அதிகாலை 5:30 மணியளவில் மீட்பு பணியை தொடங்கியது. எங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 15 பேரில் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 3 பேர் காயமுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Photo and Video Courtesy: Thanks ANI