சென்னை

எம் ஆர் என அழைக்கப்படும் பழைய மகாபலிபுர சாலை வாசிகள் தென் சென்னை வேட்பாளர்களுக்கு நல திட்டங்கள் குறித்த் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

சென்னையில் உள்ள பழைய மகாபலிபுர சாலை சுருக்கமாக ஓ எம் ஆர் என அழைக்கப்படுகிறது.  ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ள இந்த பகுதியில் பல அடுக்கு மாடி குடியிருப்புக்களும் அமைந்துள்ளன.    தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட இந்த பகுதியில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.   இவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு சங்கம் ஒன்றை தொடங்கி உள்ளனர்.

தற்போது தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களுக்கும் இவர்கள் பல கேள்விகள் கொண்ட கடிதத்தை அனுப்பி உள்ளனர்.   இது குறித்து அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷா கூடா, “இந்த பகுதியில் நாங்கள் சுமார் 3 முதல் ஐந்து லட்சம் படித்து பட்டம் பெற்றவர்கள் வசித்து வருகிறோம்.    ஆயினும் பலர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தனர்.  எங்கள் சங்கத்தின் மூலம் பலரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.

இந்தப் பகுதியின் முக்கியமான பிரச்சினைகள் குடிநீர்,  கழிவுநீர் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை ஆகும்.   நெமிலிச்சேரி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் குடிநீர் குழாய் எங்கள் பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ளது.   ஆயினும் இங்கு பலர் குடிநீர் இணைப்பு இன்றி வாழ்ந்து வருகிறோம்.

ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புக்களில் கழிவு நீர் வெளியே செல்ல இணைப்புக்கள் அளிக்கப்படவில்லை.    பல இடங்களில் இன்னும் செப்டிக் டாங்க் முறையே உள்ளது.     ஒரு சில அடுக்கு மாடி கட்டிடங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு  அங்குள்ள புல் வெளிகளுக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.

இந்த சாலையில் இரவு பகல் என எப்போதும் ஓயாத போக்குவரத்து நெரிசல் உள்ளது.   நகரின் பல முக்கிய ஐடி நிறுவனங்கள் இந்த பகுதியில் உள்ளன.   ஆயினும் சாலை பராமரிப்பு சரிவர நடப்பதில்லை.   முக்கிய சாலைகள் தவிர வேறு எந்த சாலையும் செப்பனிடப்படுவது இல்லை.

இவை அனைத்தும் மக்களவை உறுப்பினர் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் கவனிப்பின் கீழ் வருவதில்லை என்பது எங்களுக்கும் தெரியும்.   ஆனால்  அவர்கள் இந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறலாம் என்பதால் இதை தெரிவிக்கிறோம்.” என கூறி உள்ளார்.