சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என்று உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல் பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் முற்றிலும் ஆம்னி பேருந்து இயக்கத்தை நிறுத்த உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆம்னி பேருந்து சங்கத்தினர் கூறி இருப்பதாவது: இன்று காலை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க செயற்குழு நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை இரவு நேரங்களில் அதிகமாக இயக்கப்படும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பகல் நேரங்களில் மட்டும் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் முழுமையாக பேருந்து சேவையை நிறுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் நாளை முதல் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று ஒருமனதாக செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.