திருவள்ளூர்
உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
நேற்று திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. இதில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சுகாதாரத்துறை இணைய இயக்குநர் ஜவஹர்லால், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
ராதாகிருஷ்ணன் விழா முடிவில் செய்தியாளர்களிடம், “தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்கும் பேராயுதம் ஆகும். தடுப்பூசி போடாதோர் தாமாகவே முன் வந்து ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். பலவேறு துறையினர் கொரோனா தொற்று தடுப்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள 5.78 கோடி பேரில் 4.07 கோடி பேர் முதல் டோஸ் 2.38 கோடி பேர் 2ஆம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.08 கோடி பேர் முதல் தவணையும், 94.15 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அலட்சியம் காட்டக் கூடாது.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 81.04 சதவீதம், இரண்டாவது தவணை 47.03 சதவீதம் செலுத்தி தமிழகத்தில் முன்னோடியாக உள்ளது. பல நாடுகளில் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் டெல்டா வைரஸ் தாக்கம் உள்ளது. தவிர 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், ஒமிக்ரான் பாதிப்பு 50 உருமாற்றங்களில் உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை தமிழகத்தில் இல்லை என்பது வரவேற்புக்கு உரியதாகும்.
தற்போது தமிழகத்தில் பொது இடங்களில் 65 சதவீதம் பேர், 20 பேர்கள் கொண்ட மூடிய அறைகளில் 85 சதவீதம் பேர் வரையில் முகக் கவசம் அணிவதில்லை. இவை போன்ற செயல்கள் அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொள்வது அவசியம். ” எனத் தெரிவித்துள்ளார்.