டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 220ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரான் பிறழ்வு வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்ப் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரைத் தீவிரமாக கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளன.
நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், தென் ஆப்ரிக்கா உள்பட ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும், தொற்று பரவலை தடுக்க இரவு நேர லாக்டவுன் உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அறிவுறுத்திஉள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 54 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுகளின் தினசரி அதிகரிப்பு 15,000 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் தீவிரமாக பரவத்தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு நேற்று 200ஐ தாண்டிய நிலையில் இன்று 11மணி நிலவரப்படி 220 ஆக அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 ஓமிக்ரான் மாறுபாடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, தெலுங்கானா 20 வழக்குகள், கர்நாடகா 19, ராஜஸ்தான் 18, கேரளா 15 மற்றும் குஜராத்தில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜம்முகாஷ்மீர், ஒடிசாவிலும் முதன்முறையாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 57 பேருக்கும், மஹாராஷ்ட்ராவில் 54 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 123 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (23/12/2021) ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒமிக்ரானைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல், மகர சங்கராந்தி உள்பட அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதையடுத்து, மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.