சென்னை: தந்தை பரூக் அப்துல்லா உள்பட குடும்பத்துடன் அனைவரும் மீண்டும் வீட்டுச்சிறை வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள ஓமர் அப்துல்லா டிவிட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும், ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், உள்பட முக்கிய நபர்களை மத்திய பா.ஜ.க அரசு வீட்டு காவலில் சிறை வைத்தது. மேலும் மாநிலம் முழுவதும் இணையச் சேவையையும் முற்றிலுமாக துண்டித்தது. காஷ்மீர் மாநிலத்தில் அங்கு என்ன நடக்கிறது என்றே யாரும் தெரிந்து கொள்ளாதபடி மத்தியஅரசு நடந்துகொண்டது.
இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியநிலையில், வீட்டு சிறையில் வைக்கப்பட்ட தலைவர்கள் பல மாதங்களுக்கு பிறகு படிப்படியாக கடந்தஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துள்ளா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் விடுக்கப்பட்டன. தேசிய மாநாடு கட்சியின் தலைவராக பரூக் அப்துல்லா எம்.பி.யாக இருப்பதால், சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில், தற்போது, தந்தை பரூப் அப்துல்லா உள்பட தாங்கள் அனைவரும் குடும்பத்தோடு மீண்டும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாக ஓமர் அப்துல்லா டிவிட் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டிவிட்டில், “நான், எனது தந்தையும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட எனது குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். இதுதான் புதிய ஜனநாயகமா? எவ்வித விளக்கமும் அளிக்காமல் எங்களை வீட்டுக் காவலில் வைத்தது ஏன்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.