ரியோடிஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டனில் சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தாலும் இரண்டாவது பதக்கமான வெள்ளிப்பதக்கம் அவருக்கு கிடைத்தது.
பதக்கம் பெற்றது குறித்து சிந்து கூறுகையில், ‘எனக்கு கிடைத்த இந்த பதக்கத்தை என்னுடைய பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கும், தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஸ்பெயினின் கரோலினா மரினுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது.
முதல் செட்டை எளிமையாக கைப்பற்றிய சிந்துவுக்கு இரண்டாது செட் கடும் சவாலாக இருந்தது. மூன்றாவது செட்டிலும் கரோலினா வேகத்தை சிந்துவால் சமாளிக்க முடியவில்லை. இரண்டாவது செட்டிலிருந்தே கரோலினா ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார்.
இதன் காரணமாக சிந்து வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது. இது குறித்து சிந்து கூறுகையில், இப்போது நான் மேகத்தில் மிதப்பது போல் உணர்கிறேன் என்று கூறினார்.
இந்த வாரம் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும், எனக்கு ஆதரவாகவும், பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும்,
என்னோடு போட்டி போட்ட கரோலினாவும் நன்றாக விளையாடினார். எனக்கு கிடைத்த இந்தப் பதக்கத்தை என்னுடைய பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சிந்து வெற்றியை பெற்றோருடன் இந்தியாவே மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது. இந்தியா முழுவதும் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றதை முன்னிட்டு சிந்து பிறந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.