வார்சா: ஒலிம்பிக்கில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற ஒருவர், தற்போது தனது வருமானத்திற்காக உணவு டெலிவரி செய்யக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார்.

வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபென் லிமார்டோ கேஸ்கன்தான் அவர். இவர், கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக், வாள்வீச்சுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தனது திறமைக்கு அங்கீகாரம் பெறும் வகையில், வாள்வீச்சு விளையாட்டிற்கு தனி மரியாதையுள்ள போலந்து நாட்டில் குடியேறிவிட்டார்.

இந்நிலையில், கொரோனா முடக்கம் காரணமாக, இவருக்கான நிதியுதவிகள் கிடைப்பதில் பெரிய தடங்கல் ஏற்பட்டது. இதனால், பயிற்சியோடு, வருமானத்திற்காக ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திருமணமான இவருக்கு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே, ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தில், ‍உணவு டெலிவரி செய்யும் பணியாளாக தற்போது இருக்கிறார். அதேசமயம், வேலை நேரம்போக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கூறுவதாவது, “இப்போது ஸ்பான்சர்களே கிடைப்பதில்லை. ஏனென்றால், போட்டிகளே இல்லை. ஆனால், என் குடும்பத்தை ஆதரிக்க நான் சம்பாதித்தாக வேண்டும். டோக்கியோவில் பல பதக்கங்களை வெல்ல வேண்டும். எனக்காக, என் நாட்டுக்காக, நான் இந்த விளையாட்டை விட்டுப் போக விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு இன்னும் கனவு உள்ளது. நான் எங்கு சென்றாலும், என் நாட்டின் கொடியை 100% உணர்ச்சிப் பொங்க, பெருமிதத்துடன் உயர்த்திப் பிடிப்பேன்” என்றுள்ளார் ரூபென்.