ரியோடி ஜெனிரோ:
ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபா கர்மாகர், இந்திய மக்களிடம் உருக்கமாக மன்னிப்பு கோரி உள்ளார்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் மகளிர் பிரிவில் அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தி நூலிழையில் பதக்கத்தை தவற விட்டார். இதனால் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இவர் 15.066 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது தோல்வி குறித்து கர்மாகர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: , “130 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், மிகக் கடினமாக முயற்சித்தேன். முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என மிக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸில் ஒலிம்பிக் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ஒருவரே. திரிபுராவைச் சேர்ந்தவர் தீபா கர்மாகர் .
அவரது மன்னிப்பு கோரிய டுவிட்டை அடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் சக விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று திபாவுக்கு ஆதரவுக்கரங்கள் நீட்டி வருகின்றனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்காவிட்டாலும், கோடானுகோடி மக்களின் இதயங்களில் பதக்கமாக வீற்றிருக்கிறார் கர்மாகர் என்பதில் ஐயமில்லை. அடுத்த ஒலிம்பிக்கில் அவர் பதக்கத்தை வெல்வார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.