டில்லி,

மிழகத்தில் ஓகி புயலின் பாதிப்பை  தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் ஆவேசமாக வலியுறுத்தி பேசினார்.

வங்க கடலில் உருவாக ஓகி புயல் கடந்த மாதம் 30ந்தேதி  கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னா பின்னப்படுத்தி சென்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான  ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களில் 600க்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை.

இந்நிலையில், ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தி பேசினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியது. மாநிலங்களவை தொடங்கியதும், குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு,  ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் சாதனைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மறைந்த எம்.பிக்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாநிலங்களவை வழக்கமான அலுவல் தொடங்கியது.

அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியுள்ள ஒக்கி புயல் பாதிப்பு குறித்து, அதிமுக எம்.பி,க்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் “கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஏற்று ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு தேவையான நிதியுதவியை வழங்க வேண்டும்’’ எனக் கூறினார்.

 

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது தலைமையிலான முதல் கூட்டம் இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.