சென்னை,
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயல் காரணமாக கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பார்வையிட்டு, அங்குள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் 18 நாட்களுக்கு பிறகு பிரதமர் மோடி ஓகி பாதிப்புகள் குறித்து அறிய கன்னியாகுமாரி வருகிறார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உடனடியாக சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனால் தான் மோடியும் தற்போது கன்னியாகுமாரி வருகிறார். இது தாமதமான வருகை. கண்டனத்துக்குரியது என்றார்.
மோடி தாமதமாக வந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், முதற்கட்ட நிவாரணமாக மத்திய அரசு ரூ.1000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், இதற்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போனவர்களை 7 வருடம் கழித்துதான் இறந்ததாக கருதி நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதை தற்போது 2 வருடமாக குறைத்து இருக்கிறார்கள்.
ஆனால், ஓகி புயல் காரணமாக, கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களுக்கு இதில் சிறப்பு சலுகை வழங்கி விரைவில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தற்போது தமிழக அரசு, ஓகி புயல் காரணமாக இறந்துபோன மீனவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளது. அதேபோல் உள்நாட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், விவசாயிகள் பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.