கன்னியாகுமரி,
கடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் வீசி ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானர்கள். இன்னும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், தற்போது 47 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக மீட்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடுக்கடலில் தத்தளித்த 47 மீனவர்கள் 20 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்பு: உறவினர்கள் உற்சாகம்!
குமரி மாவட்டத்தை சின்னப்பின்ன மாக்கிய ஒகி புயலின் பாதிப்பு இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், மக்களும் அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.
இந்நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் என்ன ஆனார்கள் அவர்களின் கதி என்ன என்பது தெரியாமல், அவர்களின் குடும்பத்தினர் சோகத்துடன் காத்திருக்கின்றனர்.
மீனவர்களை மீட்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறி வருகின்றனர். இதற்கிடையிலும், குமரி மாவட்ட மீனவர்கள் ஒரு குழுவினராக காணாமல் போன மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற 4 விசைப்பட குகள் நடுக்கடலில் தத்தளித்தபடி இருந்ததை மீட்புப் படகுகளில் சென்ற மீனவர்கள் கண்டுபிடித்தனர்.
அவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வருகின்றனர். அந்த விசைப்படகில் 47 மீனவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். இதுகுறித்து மீட்பு படையினர் அந்த மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர், இதன் காரணமாக அந்த கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய பெர்லின், ஒகி புயலால் கடலுக்குள் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கடந்த 10 நாளுக்கு முன்பு வள்ளவிளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 விசைப்படகுகள் மூலமாக கொச்சி கடற்கரையில் இருந்து மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றனர்.
8 நாள்கள் தேடுதலுக்குப் பின்னர் நோவா என்ற விசைப்படகில் நடுக்கடலில் தத்தளித்த 10 மீனவர்களைக் கண்டு பிடித்து 19-ம் தேதி அவர்களை கொச்சின் துறைமுகம் வழியாக வள்ளவிளை கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து கடலுக்குள் மீனவர்கள் தேடியதில் 300 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதியில் டீசல் இல்லாமலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செயின்ட் பிரான்சிஸ், மேரி இமாகுலேட், ஓசியன் ஹண்டர், செயின்ட் ஹவுஸ் ஆகிய 4 விசைப்படகுகளை மீனவர்களே கண்டுபிடித்தனர். அதில் 47 மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.
மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ நவீன வசதிகளை வைத்திருந்தும் காணாமல் போன மீனவர்களை மீட்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.