நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னாபின்னப் படுத்திய ஓகி புயலின் கோரப்பிடியில் சிக்கி 30லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதாக கூறக்கபடுகிறது.
வங்ககடலில் உருவான ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி சென்றது. போகும் வழியில் குமரி மாவட்டம், கேரளாவின் திருவனந்தபுரம் போன்ற கடற்கரை பகுதிகளில் பேயாட்டத்தை போட்டு சென்றது.
இதன் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றுக்கு குமரி மாவட்டம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் அழுகத் தொடங்கி உள்ளது.
பேய் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் மற்றும் குளங்கள் உடைந்து பல கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி தனித்தீவாக மாறின.
ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்து போக்குவரத்தை சீர் குலைத்தன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவாளை போன்ற பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செவ்வாழை, பச்சை, பூங்கொல்லி, நேந்திரம் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன.
ஆனால், இவைகள் ஓகியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தரையில் விழுந்து சரண டைந்தன. சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் புயலின் சீற்றம் காரணமாக உடைந்து சாய்ந்தன.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்