சென்னை,

டலில் கலந்துள்ள எண்ணை கழிவுகளை வாளியில் அள்ளுவதுதான் டிஜிட்டல் இந்தியாவா என்று கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. கனிமொழி.

சென்னை எண்ணூர் கடல்பகுதியில், கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவை இன்று பார்வையிட்ட தி.மு.க. எம்.பி. கனிமொழி, “எண்ணெய் கசிவுகளை நீக்க நவீன வசதிகளைப் பயன்படுத்தாமல், வாளிகளைக் கொண்டு அள்ளப்படுகிறது.

இதுதான் மத்திய பாஜக அரசு கூறும் டிஜிட்டல் இந்தியாவா” என்று கேள்வி எழுப்பினார்.

எண்ணெய் கசிவு பகுதிகளை பார்வையிட்ட கனிமொழி, பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“எண்ணெய் கசிவு பல கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியிருக்கின்றன. விபத்து நடந்த உடனே நவடிக்கை எடுத்து இதைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

அதைச் செய்ய அரசு நிர்வாகம் தவறிவிட்டது. இதனால் சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. கடற்கரை பகுதிகளில் வாழும் மக்கள் தற்போது நச்சுக் காற்றை சுவாசிக்கின்றனர்.

இந்த நச்சுக்கழிவை வாளிகளில் அள்ளி அகற்றுகிறார்கள். நவீன வசதிகளைப் பயன்படுத்த திறமில்லாத அரசாக இருக்கிறது.

இதைத்தான் டிஜிட்டல் இந்தியா என்று மத்திய பாஜக அரசு சொல்கிறதா?

இந்த கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை” என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.