சென்னை:

சென்னையில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அந்த சமயங்களில்  அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக தென்சென்னை திமுக வேட்பாளர்  தமிழச்சி தங்கபாண்டியன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இரவு நேரங்களில் அவ்வப்போது பகுதி வாரியாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அனல் கக்கும் கோடை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதேவேளையில், ஆளுங்கட்சியினர் தற்காலிகமாக மின்வெட்டை உருவாக்கி ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில்  தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, மேட்டுப்பாளையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பொதுமக்களிடம் பேசியவர், இரவு நேரங்களில் வேண்டுமென்றே கரன்ட்டை கட் பண்ணி, ஆளுங்கட்சியான அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிந்தாலும், அவர்கள்  கண்டு கொள்வதே இல்லை என்றும்,  மக்களை இருட்டில் தள்ளி பணம் கொடுக்கும் கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டிங்கண்ணா.. உங்க வாழ்க்கையும் இருளில் தான் மூழ்கிப் போகும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை தொடர்ந்து ஒழுங்காக செயல்படுத்தி இருந்தாலே, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்திருக்க முடியும் என்றவர், இத்தகைய அனைத்து பிரச்சனைகளையும் திமுக ஆட்சிக்கு வந்தால் சரி செய்ய முடியும்.

இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.