சென்னை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனைதான் சரியான தீர்வாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் பல முறை நீதிமன்றம் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கைகள் செய்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி மதிக்கவில்லை என தெய்வசிகாமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி அதிகாரி தெய்வசிகாமணிமீதான புகார்கள் காரணமாக, அவரது பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெய்வசிகாமணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, தெய்வ சிகாமணி பெயர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

ஆனால், அதை ஏற்காமல் உயர்அதிகாரிகள் செயல்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மாநகராட்சி மதிக்கவில்லை என தெய்வ சிகாமணி மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என்பது பணியில்  அதிகாரிகள்  நேர்மையுடன் செயல்படாததை காட்டுகிறது என்று விமர்சித்ததுடன், அதிகாரிகள்,  அரசு பதவியை, லஞ்சம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என சாடியதுடன்,  நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில், அந்த அதிகாரிகளுக்கு பிரதான தண்டனையாக  சிறை தண்டனையே  இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.