புபனேஷ்வர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசு.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால், சுகாதார ரீதியாக இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. இந்நிலையில், ஒடிசா மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது; ‘ஒடிசாவின் ரூர்கேலா, ஜெய்பூர், தென்கனல் மற்றும் அங்கல் பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்கள் தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஹரியானா, மராட்டியம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா, புதுடெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இந்தியாவில், புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர்.
தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 15 கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.