ஒரிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டம் பராஜ்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அம்மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

பராஜ்ராஜ் நகரில் உள்ள காந்தி சஹக் பகுதிக்கு காரில் வந்து இறங்கிய அமைச்சர் நாபா தாஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

காரில் இருந்து இறங்கும் போதே அவரது நெஞ்சை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனையடுத்து அவரை ஜர்சுகுடா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரது நிலை மிகவும் மோசமானதை அடுத்து புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இவருக்கு சிகிச்சையளிக்க புவனேஸ்வரில் உள்ள அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் தயாராக உள்ள நிலையில் விமானநிலையம் முதல் மருத்துவமனை செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையைச் சேர்ந்த கூடுதல் உதவி-ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காந்தி சஹக் புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் கோபால் தாஸை கைது செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் எதற்காக சுட்டார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை புலன்விசாரணைக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.