சென்னை:
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.
இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
”ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கோர விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் ஒடிசா முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தேன். மீட்புப் பணிகளுக்காக உதவிகள் தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து துறை செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் துறை செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நான்கு, ஐந்து நாட்கள் அங்கு தங்கி அவர்களுக்கான உதவிகள் செய்ய மாவட்ட அலுவலர்களும் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு மையத்தை நேரில் சந்தித்து இந்த விபத்து குறித்து கேட்டு அறிந்தேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அங்கிருந்து சென்னை வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தொலைபேசி எண்களும், வாட்ஸ்அப் எண்களும் பொது மக்கள் தொடர்பு கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநில நிர்வாகத்துடன் நமது அதிகாரிகள் தொடர்ந்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காணொலி காட்சி மூலமாக அங்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளோம். தமிழ்நாடு அரசு சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும். தமிழ்நாடு அரசு சார்பில் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.