ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், முளைப்பாரி ஜோதி ஓட்டம் ஊர்வலம் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும்  மாவட்ட  ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில், வருகிற 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தியும் 59வது குரு பூஜையையும் சிறப்பாக கொண்டாட தேவர் சமூகத்தினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், தேவர் குருபூஜை  நிகழ்ச்சியில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், முன் அனுமதி பெற வேண்டும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தேவர் குருபூஜைக்கு வெளி மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளதுடன், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு உள்ளதால் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது, வாடகை வாகனங்களில் வரக்கூடாது   முளைப்பாரி ஜோதி ஓட்டம் ஊர்வலம் பேரணி போன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்று கூறி உள்ளார்.

மேலும்,  வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும்,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஆட்சியர் கூறி உள்ளார்.