அக்டோபர்-3 இன்றைய தினம்  “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்தை தனியாக பிரிக்க நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்  ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு சொந்தமான யிலை பொன்னுசாமி சிவஞானம்.

மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த மபோசி,  இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை  கவர்ந்திழுத்து வைத்திருந்த மபோசியின்  மேடைப் பேச்சை கேட்போர்களை கவர்ந்திழுக்கும் காந்த சக்தி மிக்கது.

தமிழகத்தில், முதன்முதலில் “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு”  என்றும், “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்றும், “தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். (இவரின் குரலைத்தான் திமுக தற்போது தனதாக்கி, பேசிக்கொண்டு வருகிறது)

வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி.

திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கிய தன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது.

தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது.

கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது ‘தமிழரசுக்கழக’ மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு.

சங்க இலக்கியத்தில் ம.போ.சி. தேர்ந்தவராக விளங்க களம் அமைத்துக்கொடுத்தது சிறைவாசம். தன் சிறை வாசத்தைச் சிலப்பதிகாரம், பாரதியின் படைப்புகள் உள்ளிட்ட இலக்கியங்களை படிக்க பயன்படுத்திக்கொண்டார். பாரதியின் மீது தணியாத காதல் கொண்ட ம.பொ.சி, அவரைப்பற்றி படைத்த நுால்கள் திறனாய்வுக்கு ஒப்பானவை.

இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். இவரது பணி சிறக்கச் சிறக்க சிலப்பதிகாரத்தை இவர் பிரபலமாக்க “சிலம்புச் செல்வர்” என்ற அடைமொழி இவர் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது.

வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர். அன்றைய பிரபலமான தேசபக்தரும், வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் அனுபவித்தவர் ம.பொ.சி.

சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து விஷால் ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர். உடனே கலவரம். நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழு அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன.

இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். காங்கிரஸ்  கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை. இதையடுத்து,  காங்கிரசை விட்டு வெளியேறினார். அவர் அதற்கு முன்பே கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த “தமிழரசுக் கழகத்தை” எல்லைப் போராட்டதில் ஈடுபடுத்தித் தானும் போரில் ஈடுபட்டார்.

பிரிட்டிஷ் காலத்தில் மெட்ராஸ் கார்ப்பரேஷன் கொடியில் ‘கடல், படகு, 3 சிங்கங்கள் மற்றும் 2 மீன்கள்’ இருந்தன. 3 சிங்கங்கள் ஆங்கிலேயர்களைக் குறிக்கும் மற்றும் கடல், படகு, மீன் ஆகியவை மெட்ராஸின் கடலோரத்தைக் குறிக்கின்றன.

ஆனால்,  சுதந்திரத்திற்குப் பிறகு கொடியை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்தது. அப்போது,  கழகத்தின் கல்விப் பிரிவின் தலைவராக இருந்த எம்.பி.சிவக்னனம், பாண்டியா, சோழர், சேராவின் சின்னமான ‘மீன், புலி மற்றும் வில்’ இணைத்து தனிக்கொடி உருவாக்கினார். அதுதான் தற்போதும் சென்னை மாநகராட்சியின் சின்னமாக விளங்கி வருகிறது.

ம.பொ.சி. எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சி இவரை தூக்கி வெளியில் எறிந்து விட்டது. போர் குணம் இவருக்கு உடன் பிறந்த தாயிற்றே. விடுவாரா. இவரும் முழு மூச்சுடன் போராட் டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது.

 

ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

எந்த இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அங்கு இவருக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் ‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு” என்று அடிக்கடி நடத்தினார்.

ஆனால், அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில்தான்  இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். ஆனால், மபோசியோ  போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்றார்.

சுதந்திரதின பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போடில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந் தெல்லாம் புனித மண் எடுத்து அதையெல்லாம் டில்லியில் காந்திசமாதி ராஜ்காட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930ல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சிக்குக் கொடுத்தார்.

தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்து வந்து டில்லியில் சேர்த்தார். அதைப்பற்றி அவர் எழுதிய நூலில் அந்த பயணம் முழுவதிலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து கலந்து கொள்ளவோ, சந்திக்கவோ இல்லை என்று எழுதியிருந்தார்.  ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தாராம்.

தஞ்சை ரயில் நிலையத்தில் அன்றைய நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் டில்லி செல்வதற்காக நின்றிருந்த போது ம.பொ.சியைச் சந்தித்துப் பேசினாராம். தன் வாழ்நாள் எல்லாம் ராஜாஜியின் அந்தரங்க தொண்டராக இருந்தவர் இவர். எந்த பதவியையும் கேட்டுப் பெறாதவர். ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கிய போது எவ்வளவோ கூப்பிட்டும் ம.பொ.சி. அந்தக் கட்சிக்குப் போகவில்லை.

வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டுடன், ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை,  மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத் தன்னை காட்டிக்கொள்பவர் மபோசி.

1968 ம் ஆண்டு அதுவரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதல்வர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டவர் மபோசி.

அதிகாரம் தந்த கவுரவத்தினால், சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றும் பெருமையை அண்ணா அடைந்தாலும், அந்த பெயர் மாற்றத்திற்குப் பின்னணியாக ஒருவரின் கடந்த காலபோராட்டங்கள் இருந்தன. அதுதான் அண்ணாவின் வானளாவிய பாராட்டுக்கு காரணம். அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்த தலைவர், ம.பொ.சி என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

இந்த மாமனிதன் நெடுநாள் வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இவர்1995ஆம் வருடம் அக்டோபர் 3ம் தேதி தனது 89ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்!