தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி துவங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

முதல் நாள் கூட்டத்தில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மற்றும் பிறருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மானியங்களுக்கான கூடுதல் செலவு கோரிக்கைகள் சட்டமன்றத்தில் வைக்கப்படும். கூட்டத்தொடருக்கு முன்னதாக, அலுவல் ஆலோசனைக் குழு கூடி அட்டவணையை இறுதி செய்து அறிவிக்கும்.

இந்த கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்தக் கூட்டத்தொடரில் சூடான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக பிரச்சினை எழுப்ப வாய்ப்புள்ளது.

சமீபத்தில் பிளவுபட்ட பாமக உறுப்பினர்களின் சட்டமன்ற நடவடிக்கைகளும் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேர்தலுக்கு முன்னதாக சிறப்பான அறிவிப்புகளை வெளியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் இந்த கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.