சென்னை: தமிழ்நாடு முழுவதும்  அக்டோபர் 11-ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம்  முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார் என அரசின் மக்கள் செய்தி தொடர்களில் ஒருவரான  ககன்தீப் சிக் பேடி  தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளையொட்டி,  நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் நாளை அக்.11-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 11ந்தேதி (நாளை) கிராமசபை கூட்டங்கள்  உள்ளன.

இதுதொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த ககன்தீப் சிங் பேடி,  மாநிலம் முழுவதும்  12000 ஊராட்சிகளில் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றுகிறார். 10 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் காணொலி வாயிலாக பேசுகிறார்.  முதல்வர் உரைக்காக நெட் பாரத் திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. சாதி பெயர்கள் உள்ள ஊர்களின் பெயர்களை மாற்றுவது குறித்து நாளை கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று கூறினார்.

குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். குப்பை அகற்றுதல், சாலை வசதி, பேருந்து வசதி குறித்த குறைகள் கேட்டறியப்படும். தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக நாளை கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில்,  உடனடியாக நிறைவேற்றப்படக் கூடிய 3 தேவைகளை தேர்வு செய்து கிராம சபை தீர்மானம் பெறுதல் வேண்டும். அதை  நாளை மாலையே இணையதளத்தில் பதிவுசெய்து குறைந்த காலத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

நம்ம ஊரு நம்ம அரசு திட்டத்தின் கீழ் தீர்மானங்களுக்கு தீர்வு காணப்படும்.

கிராமங்களில் மிக ஏழ்மையான குடும்பங்களை கண்டறிய கிராமிய வறுமை ஒழிப்பு குழுவை கேட்டுள்ளோம். கிராமிய வறுமை ஒழிப்பு குழு மூலம் ஏழை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். 6 கிராம சபைக் கூட்டங்கள் தவிர சிறப்புக் கிராம சபைக் கூட்டங்களும் நடத்தப்படும்.

‘இவ்வாறு கூறினார்.