சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா நாளை அதிகாலை நடைபெற உள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பந்தக்கால் பூஜை நாளை (அக்டோபர் 4ந்தேதி) அதிகாலை 4 – 6 மணிக்கு நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநாடு நடத்த இடம் வழங்கிய நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார் இதைத்தொடர்ந்து, கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துகிறார். அதன்படி இந்த மாதம் 27ந்தேதி தவெகவின் முதல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இம்மாநாட்டுக்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை ஏற்று மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்துவர பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எத்தனை பேரை அழைத்து வர வேண்டும், அவர்களுக்கான வசதிகள் குறித்து தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவித்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 100 முதல் 150 உறுப்பினர்களை தேர்வு செய்து தன்னார்வலர்களாக இணைக்க வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் எனவே 10 ஆயிரம்பேர் மாநாட்டுக்காக தன்னார்வலர்களாக இணைவார்கள் என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதேநேரம் மாநாட்டில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி இருக்கை வசதிகள், வாகன நிறுத்தும் வசதிகள், கழிப்பறை வசதிகள், உணவு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன
இந்த நிலையில், மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பந்தக்கால் நடும் விழா நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் அமைக்கும் பணிகள் உள்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜயின் தவெ.க மாநாடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!