சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பான விவரங்களை பதிவேற்றிய இணையதளம் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில்  விசாரிக்கப்பட்டுவருகிறது. இநத வழக்கின் ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கின் கடந்தவார விசாரணையின்போது,  தமிழகஅரசின்  தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,  நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த நீதிபதிகள், எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்று கூறியதுடன், முறையான அறிக்கை ஒருவாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் bசன்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத்,  நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது,  இந்த வழக்கில் தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராக விலக்களிக்கக்கோரி அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மனு தாக்கல் செய்தார். மேலும், இதுதொடர்பாக வருவாய் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், தமிழகத்தில் உள்ள  நீர்நிலை கள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும்கூறினார். எனவே தலைமை செயலாளர் வெ.இறையன்பு நாளை ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், தலைமை செயலாளர் ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரியையும் நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.