சென்னை:
மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அவர் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓ.பி.சி-க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாகவே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு என்ற ஒன்றிய அரசின் நகர்வு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி; குறிப்பாக திமுகவின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.