சென்னை
நாளை நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனின் தாயாக நடித்து வருகிறார். அவர் தனது எட்டு வயது மகனுடன் பேருந்தில் பயணிக்கும் போது தனது மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார்.
அந்த பேருந்து மலைப்பகுதியில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி சக பயணி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
எனவே நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் உருளையைக் கைப்பற்ற சக பயணிகள் முயல்கிறார்கள். இவ்வாறு நடக்கும் அந்தப் போராட்டத்தில் பார்வதி என்கிற பெண்ணாக நயன்தாரா தன் மகனைக் காக்க என்ன செய்தார் என்பதுதான் `ஓ2’ படத்தின் கதை ஆகும்.
ஓ2 படத்தை டீரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி எஸ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.