டில்லி

தொலைதூரக் கல்வி கொள்கை மாற்றத்தினால் தொழில்நுட்ப கல்விகளான செவிலியர் மற்றும் பொறியியல் கல்விகளும் தொலைதூரக் கல்வி அமைப்பில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது..

முழு நேரக் கல்லூரி, மற்றும் பகுதி நேரக் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க முடியாத மாணவர்கள் தொலைதூரக் கல்வி மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.   கடந்த 2013 முதல் அரசு அத்தகைய கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்ப கல்வியான, பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தாளுமை, செவிலியர், மற்றும் விவசாயம் ஆகிய கல்விகளின் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி பட்டியலில் இருந்து நீக்கியது.  தொலைதூரக் கல்வி மூலம் செய்முறைப் பயிற்சிகளை செய்ய முடியாததால் இந்த நீக்கம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) செய்முறைப் பயிற்சியை தனியாக நடத்த வசதியுள்ள கல்வி நிறுவனங்கள் தொலைதூர கல்வி முறையில் தொழில்நுட்ப கல்விகளையும் இணைக்கலாம் என கூறி உள்ளது.   இதன் மூலம் மாணவர்கள் செய்முறைக்கு மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வந்து,  மற்ற தியரி பாடங்களை வீட்டிலிருந்தே படிக்கலாம்.

அத்தகைய கல்வி நிறுவனங்கள், தங்களிடம் அது போல வசது உள்ளதாக அனுமதி தரும் துறைகளிடம் விண்ணப்பித்து தொலைதூரக் கல்வியில் பல தொழில்நுட்ப கல்விகளை இணைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.  அரசு தரப்பில், முழுநேர வகுப்பில் சேர்ந்து கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு உதவுவதே தனது குறிக்கோள் என தெரிவித்துள்ளது.