கோட்டா

ந்திய சுதந்திரத்துடன் நெருங்கிய தொடர்புள்ள கதர் துணிகளுக்கு, சுதந்திரத்துக்கு பின் முதன்முறையாக ஜி எஸ் டி மூலம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கதர்துணிகளின் உற்பத்தியும் விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது.  அங்குள்ள விற்பனை நிலையங்களில், கதர் துணி, கதரினால் செய்யப்பட்ட பைஜாமா, குர்தா, நேரு கோட், கம்பளம் போன்ற பல பொருட்கள் பெருமளவில் விற்பனை ஆகிறது..   கோட்டா பகுதியில் கதர் விற்பனை ஆண்டுக்கு குறைந்தது 2 கோடியாகவும், 500 நெசவாளிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது

சமீபத்தில் அமுலாக்கப்பட்ட ஜி எஸ் டி வரியில் கதர் நூல், காந்தி தொப்பி, தேசியக் கொடி ஆகியவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் கதர் துணியால் செய்யப்பட்ட மற்ற ஆடைகளுக்கு 5% முதல் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டா பகுதியில் உள்ள கதர் விற்பனையாளர்கள் வரி விதிப்பினால் கவலை அடைந்துள்ளனர்.   கதர் துணிகளுக்கு 5% வரியும்,  கதர் துணியால் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகளின் மதிப்பு ரூ ஆயிரத்தை தாண்டினால் 12% வரியும், கதர் பாலியஸ்டர் துணிகளுக்கு 18% வரியும் விதிக்கப் பட்டுள்ளன.   இதனால் விற்பனை பெருமளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து, பாரம்பரிய கதருக்கு ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்க உள்ளனர்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கதர் என்பது இந்திய சுதந்திரத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் சிறிதும் தொடர்பற்ற பாஜக வினால் புரிந்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது