சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பணி நீக்கம் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 9வது நாளாக போராட்டத்தில் குதித்துள்ள ஒப்பந்த செவிலியர்கள், தங்கள் கோரிக்கைகளை கடிதம் மூலம் எழுதி தமிழக அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் அண்மையில் தமிழக அரசு நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டத்தினை அடுத்து தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், 9வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் இன்று செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்கள் மூலம் தமிழக அரசுக்கு வலிறுத்த கோரிக்கை கடிதங்களை எழுதி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், இதுபோன்ற கடிதம் எழுதி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகஅரசுக்கு தபால் மூலம் அனுப்பும் கோரிக்கை மனுவில், நாங்கள் எம்.ஆர்.பி. தேர்வு மூலம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டாய பணி ஆணை மூலம் கொரோனா மூன்று அலைகளிலும் பல லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம். எங்களுக்கு நிரந்தர தன்மை உடைய ஒப்பந்த பணி வழங்க வேண்டும். ஆனால் தற்போது தற்காலிக முறையில் ஒப்பந்த பணிக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்ற தவறான தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே தற்காலிக ஒப்பந்த பணியை ரத்து செய்து நிரந்தர ஒப்பந்த பணி வழங்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.