சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக  கைது செய்தனர்.

பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணா விரத போராட்டத்தைத் தொடங்கினர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டாலும், சென்னையைத் தொடர்ந்து கிளாம்பாக்கம், ஊரப்பாக்கத்தை அடுத்து நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தைகள் தோல்வி: இதற்கிடையே, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமாருடன் ஒரு முறையும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இருமுறையும் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் நேற்று 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 8,322 செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கோஷமிட்டனர். அங்கிருந்த கழிப்பறைகள் மூடப்பட்டதால், அருகே உள்ள நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ளகழிப்பறைகளுக்குச் சென்றுவிட்டு, போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட செவிலியர்களை வழிமறித்து போலீஸார் கைது செய்தனர்.

 தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட செவிலியர்களையும் போலீஸார் கைது செய்தனர். பல்வேறு இடங்களில் உள்ள மண்டபங் களில் அடைக்கப்பட்டிருந்த செவிலியர்களை மாலை விடுவிக்காமல், பேருந்துகளில் ஏற்றி வெவ்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட் டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க செயலர் சுபின் கூறும்போது, “அரசு தொடர்ந்து பல வகையில் எங்களை அடக்கி வருகிறது. ஆனாலும், எங்கள் போராட்டம் தொடரும். கழிப்பறைக்குச் சென்றவர்களை, மடக்கி கைது செய்துள்ளனர். குறிப்பாக, கழிப்பறை கதவை தட்டியும் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்தவர்களிடம் சொந்த ஊர் பற்றி போலீஸார் கேட்டுள்ளனர். யாரும் ஊர் பெயர் தெரிவிக்காததால், அவர்களே பல ஊர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸார் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

[youtube-feed feed=1]