சென்னை,
தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் திமுக எம்.பி.யான கனிமொழி.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இருந்து சென்னை வந்த ஒப்பந்த செவிலியர்கள், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
நேற்று அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து, ஒரு தரப்பு செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், மற்ற தரப்பினர் 3வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி இன்று டிஎம்எஸ் வளாகம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்..
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, `பல பெண்கள், குழந்தைகளோடு வந்து போராட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய கனிமொழி, போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்பட்டுவருகிறார்கள், அவர்களை வேலையிலிருந்து தூக்கிவிடுவோம் என ஆளுங்கட்சி மிரட்டுவதாகவும் கூறினார்.