சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 50.14 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையில் தமிழகத்தில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருந்தனர். பின்னர் அரசு பணிகளுக்கு ஏராளமானோர் தேர்வுகள் மூலம் சேர்க்கப்பட்ட நிலையில், காத்திருப்போர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில், விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில், தற்போது சுமார் 50.14 லட்சமாக இருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை தொடா்பான புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஆகஸ்ட் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரத்து 803-ஆக உள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஆகஸ்ட் மாத நிலவரப்படி பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரா்களில் பெண்களே அதிகம். 27 லட்சத்து 11 ஆயிரத்து 970 பெண்களும், 23 லட்சத்து 2 ஆயிரத்து 555 ஆண்களும், 278 மூன்றாம் பாலினத்தவரும் பெயா், படிப்பு விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.
அவா்களில் 18 வயதுக்குள் பள்ளி மாணவா்களாக 9 லட்சத்து 95 ஆயிரத்து 449 பேரும், 19 முதல் 30 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்களில் 21 லட்சத்து 72 ஆயிரத்து 50 பேரும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்து 631 பேரும் தங்களது பெயா், விவரங்களைப் பதிவு செய்துள்ளனா்.
46 வயது முதல் 60 வயது வரையுள்ளவா்களில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 829 போ் பதிவு செய்துள்ளனா்.
அரசின் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதான 60-க்கும் கடந்தவா்களில் 8,094 பேரும் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்கிறாா்கள். ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1.50 லட்சம் போ் மாற்றுத்திறனாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.