சென்னை: தமிழக தலைநகரில் மாண்டரின் சைனீஸ் கற்றுக்கொள்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதற்கான தனியார் பயிற்சியகங்களில் ஒவ்வொரு வருடமும் கற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை 20% ஆக அதிகரித்து வருகிறது. இதில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுமே பெரும்பான்மையாவர்.

மொழி பயிற்றுவிக்கும் பயிற்சியகத்தின் ஸ்தாபகரும் பயிற்சியாளருமான ஷிவ் ஷங்கர் நாயக் கூறும் பொழுது, “ஒவ்வொரு வருடமும் குறைந்தது 100 பேர் மாண்டரின் சைனீஸ் கற்றுத் தேர்கின்றனர்“ என்கிறார்.

வர்த்தக ரீதியாக பயணம் செய்வோரும் உயர்கல்விக்காக செல்வோரும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது ஊழியர்களில் ஒரு பகுதியினரை இம்மொழியினைக் கற்றுக் கொள்ள எம்மை நாடுவதிலும் சென்னையில் இம்மொழியினைக் கற்றுக் கொள்வதற்கான தேவையை அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏறத்தாழ 10,000 மொழி பெயர்ப்பாளர்கள் தேவைப்படுவார்கள். தமிழகத்திலிருந்து பெய்ஜிங், ஷாங்காய், குவாங்ஜோ போன்ற இடங்களுக்குப் பொருட்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் சென்று வருகின்றனர்.

அவ்வேளையில், இந்த சீன மொழி பெயர்ப்பாளர்களின் சேவையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு வர்த்தகக் கொள்முதலில் 2லிருந்து 3 சதவீதம் கமிஷன் தொகையாக வழங்கப்படுகிறது.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 20 மாண்டரின் சைனீஸ் பயிற்சி நிலையங்கள் உள்ளன.