மும்பை: முதலீடு தொடர்பான அமெரிக்காவின் EB-5 விசாவினை விண்ணப்பித்துப் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விசா, ‘கேஷ் ஃபார் க்ரீன் கார்டு’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இதைப் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 4 மடங்கு கூடியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, செப்டம்பர் 2018ம் ஆண்டுடன் முடிவடைந்த காலஅளவின்படி, மொத்தம் 585 இந்தியர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2017ம் நிதியாண்டில் 174 இந்தியர்கள் மட்டுமே இதைப் பெற்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், கடந்த 2016ம் நிதியாண்டில், வெறும் 149 இந்தியர்கள் மட்டுமே இதைப் பெற்றனர். இந்த விசா பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இதனடிப்படையில், தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா.
இந்த விசா பெறுவோர் எண்ணிக்கையில், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி