டில்லி:
2017ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய அரசை ஒரு பிரதிவாதியாக சேர்த்து 4 ஆயிரத்து 229 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இதேபோல் 2016ம் ஆண்டில் 3 ஆயிரத்து 497 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 3 ஆயிரத்து 909 வழக்குகள் தொடரப்பட்டிருப்பது மத்திய சட்ட அமைச்சக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், 2012ம் ஆண்டில் 4 ஆயிரத்து 149 வழக்குகள், 2013ம் ஆண்டில் 4 ஆயிரத்து 772 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த 2014ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 4 ஆயிரத்து 748 ஆக உயர்ந்தது. ஆனால், அதே நேரம் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 909 ஆக குறைந்தது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி 859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வரி விதிப்பு தொடர்பான வழக்குகள் அதிகம். ஒரு புறம் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை நலிவுற்ற நிலையில் உள்ளது.
அடுத்த 10 வாரங்களில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளது. அது வரை அடுத்த சொலிசிட்டர் ஜெனரல் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
4 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலுக்கு அடுத்த வாரம் நடக்கவுள்ள அமைச்சரவை நியமனக் குழுவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ரஞ்சித் குமார் கடந்த அக்டோபரில் ராஜினாமா செய்தார். அப்போது முதல் இந்த முக்கிய பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு யாரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது? என்பது குறித்து சட்ட அமைச்சகம் வாய் திறக்க மறுத்து வருகிறது.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலை தொடர்ந்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் 5 பேர் மத்திய அரசு சார்பில் ஆஜராகின்றனர். இது தவிர பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 9 பேர் ஆஜராகி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதத்துடன் பதவி காலம் முடிவடைந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் பட்வாலி, கவுல் ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மணிந்தர் சிங், துஷர் மேத்தா, நரசிம்மா, பிங்கி ஆன்த், அத்மரம் நத்கர்னி ஆகியோரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக பணியாற்றி வருகின்றனர்.
போதுமான சட்ட அதிகாரிகள் இல்லாத காரணத்தால் முக்கிய வழக்குகளை சட்ட அமைச்சக குழுவில் உள்ள மூத்த வக்கீல்களே கையாண்டு வருகின்றனர். இவர்களுக்கு தனியாக கட்டணம் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.