சென்னை
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்லலாம் என கே எஸ் அழகிரி எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக அவர் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசி வருவதாகப் பலரும் குறை கூறி வருகின்றனர். இதனால் அவர் பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பயங்கரவாத ஆதரவு நிலைக்குச் செல்லக் கூடும் என ஒரு சில அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள் அறிக்கையில், “கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலைக்குப் பிறகு 1 விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அமெரிக்கா,கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பு எனக் கூறி, தடை செய்துள்ளன.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014 இல் நீட்டிக்கப்பட்ட தடை 2019 இல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகச் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாகச் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சீமான் பேசியது சமூக ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளது. அவர் இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டுகிற வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற போக்கிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.
காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமான் காவல்துறைக்குத் துணிவிருந்தால் என் மீது வழக்கு தொடுக்கட்டும், கைது செய்யட்டும், நான் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன் எனத் தமிழ்நாடு காவல்துறைக்குச் சவால் விட்டுத் தொடர்ந்து பேசி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். இது போல சீர்குலைவு சக்திகளை முளையிலேயே கிள்ளி எறியவில்லையெனில், அவரது வன்முறை பேச்சால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான தீவிரவாத பாதைக்குச் செல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி ஒரு பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
சீமான் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத, அடங்க மறுக்கிற அடாவடித்தனமாகச் செயல்படுகிற சமூக சீர்குலைவு சக்தியாக விளங்கி வருகிறார். அவர் மீது தமிழக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து, இவரது சட்டவிரோத பேச்சின் அடிப்படையில் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.