சேலம்
தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய பாஜக அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை விரைவில் அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்த மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் அமைக்கப்படும் எனத் தகவல்கள் வந்தன.
எனவே இந்த மக்கள் தொகை பதிவேட்டுக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு அமலாக்கப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்குத் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை எனவும் உறுதி அளித்துள்ளார்.
ஆனால் திமுக குடிமக்கள் பதிவேட்டையும் மக்கள் தொகை பதிவேட்டையும் தொடர்புப் படுத்திக் கூறி மக்களைக் குழப்பி வருகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் விரும்புவது மக்கள் தங்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதாகும், எனவே மத்திய அரசுக்கு மக்கள் தொகை பதிவேடு அமைக்க அனைவரும் உதவ வேண்டும்.
தற்போது மக்கள் தொகை பதிவேடும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கனவே ஊடகங்களில் தெரிவித்தபடி இதற்கான பணிகள் வரும் ஏப்ரல் மாதம்முதல் தொடங்கப்படும். இது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இந்த முதல் கட்ட கணக்கெடுப்பில் 34 விதமான விவரங்கள் இடம் பெறும்.” எனத் தெரிவித்தார்.